இன்றைய நவீன உலகில் சரக்குக் கப்பல்கள், தொடர்வண்டிகள், கனரக வாகனங்கள் மற்றும் தொழில்சாலை இயந்திரங்கள் இயங்குவதற்கு மிக முக்கியமான எரிபொருளாகவும் ஆற்றலாகவும் இருப்பது டீசல் என்ஜின். மனித சமுதாயத்தின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர் ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற பொறியாளர் ருடால்ஃப் டீசல் . இவருடைய கண்டுபிடிப்பு உலகை அதிவேகமாக இயக்கியபோதிலும், இவரது இறுதி காலம் மற்றும் மரணம் இன்றளவும் அவிழ்க்க முடியாத மிகப்பெரிய மர்மமாகவே நீடிக்கிறது.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நீராவியால் இயங்கும் என்ஜின்கள் மிகக் குறைந்த திறமையுடனே செயல்பட்டு வந்தன. இதைக் கண்ட ருடால்ஃப் டீசல், அதிக அழுத்தத்தைப் பயன்படுத்தி மிகக் குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் புதிய வகை என்ஜினைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டார். பல ஆண்டுகள் கடின உழைப்பிற்குப் பிறகு, 1890-களில் அவர் உருவாக்கிய அழுத்தக் பற்றவைப்பு என்ஜின்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவருடைய இந்த அசாதாரணக் கண்டுபிடிப்பைக் கெளரவிக்கும் விதமாகவே அந்த என்ஜினுக்கும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட எரிபொருளுக்கும் ‘டீசல்’ என்று பெயரிடப்பட்டது.

டீசல் என்ஜினின் வரவு உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று, ருடால்ஃப் டீசலுக்குப் பெருமையையும் புகழையும் தேடித் தந்தாலும், தொழில்ரீதியான போட்டிகளும் நிதி நெருக்கடிகளும் அவரைச் சூழ்ந்தன. இத்தகைய சூழலில், 1913-ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று, லண்டனில் நடைபெறும் ஒரு முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ‘டிரெஸ்டன்’ என்ற நீராவி கப்பலில் ருடால்ஃப் டீசல் பயணம் மேற்கொண்டார். அன்றைய இரவு உணவை முடித்துவிட்டுத் தனது அறைக்குச் சென்றவர், மறுநாள் காலை அறை கதவைத் திறந்து பார்த்தபோது ஆள் இல்லாமல் மாயமாகி இருந்தார்.

அவர் கப்பலில் இருந்து கடலில் விழுந்து இறந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், சில நாட்களுக்குப் பிறகு கடலில் மிதந்த அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தற்கொலையா அல்லது தொழில் போட்டி மற்றும் அரசியல் காரணங்களால் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலையா என்ற கேள்வி உலகளவில் பூதாகரமாக வெடித்தது. ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் பல ஊகங்கள் நிலவியபோதிலும், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் இன்றுவரை அதிகாரப்பூர்வமாகத் தெளிவாகத் தெரியவில்லை. உலகையே இயக்கிய ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கை, இப்படி ஒரு மர்மமான முடிவைச் சந்தித்தது வரலாற்றின் சோகமான பக்கங்களில் ஒன்றாக நிலைத்துவிட்டது.