இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரத்தில், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாகக் கடந்த திராவிட ஆட்சியாளர்களைக் குறைகூறி வீரவசனம் பேசிய ஜோசப் விஜய், முதலமைச்சரான பின்பு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதும் நடைமுறையைத் தாண்டி வேறு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அவர் வினவியுள்ளார். ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆன நிலையிலும் பழைய முறையையே தொடர்வது சரியா என்றும் அவர் கேட்டுள்ளார்.
ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும்போதும் மத்திய அரசுக்குக் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு அமைதியாகிவிடுவதாக அவர் சாடியுள்ளார். எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்யப்படும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உறுதியான மற்றும் நிரந்தரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக ஆளும் தவெக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மீனவர்களின் இன்னல்களைப் போக்க அரசியல் செய்யாமல், கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடிதம் எழுதுவதைத் தாண்டி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
