டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் அண்மையில் தன்வசப்படுத்தினார். கியீரன் பொலார்டின் சாதனையை முறியடித்து இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்த அவரிடம், எதிர்காலத்தில் உங்களது இந்தச் சாதனையை முறியடிக்கக் கூடியவர் யார் என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த பட்லர், சாதனை என்பது உடைக்கப்படுவதற்காக மட்டுமே உருவாக்கப்படுகிறது என்று குறிப்பிட்டதுடன், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்டிங் சென்சேஷனான வைபவ் சூர்யவன்ஷி தனது சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்ததுடன், வைபவ் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

இந்தியாவின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மீது ஜாஸ் பட்லர் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கக் பலமான காரணங்கள் உள்ளன. வைபவ்வின் பேட்டிங் திறமையை மிக அருகில் இருந்து கவனித்துள்ள பட்லர், அவரது அபாரமான ஆட்டத்திறனையும், பந்துகளை எதிர்கொள்ளும் துணிச்சலையும் பார்த்து வியந்துள்ளார். அண்டர்-19 கிரிக்கெட் தொடங்கி ஐபிஎல் தொடர் வரை தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த வைபவ், ஜிம்பாப்வே நாட்டிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் அதிகபட்சமாக 151 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது அடியை மிக ஆழமாகப் பதித்துள்ள இந்த இளம் வீரரின் தொடர்ச்சியான வளர்ச்சி கிரிக்கெட் வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவரின் சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது அவரது இளம் வயதுதான். தற்போது வெறும் 15 வயது மட்டுமே ஆன இவர், தனது ஃபிட்னஸையும் ஃபார்மையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டால், அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு உலக கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வர முடியும். எதிர்காலத்தில் அதிக ஐபிஎல் சீசன்களில் விளையாடும் வாய்ப்பும், டி20 போட்டிகள் அதிகம் நடைபெறும் சர்வதேச காலண்டரும் வைபவ்விற்கு மிகப்பெரிய பலமாக அமையும். ஜாஸ் பட்லரின் இந்தத் துணிச்சலான கணிப்பை வைபவ் சூர்யவன்ஷி எதிர்காலத்தில் நிஜமாக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.