உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் மாணவர்கள் பாடம் படிக்காமல் மொபைல் போன்களில் மூழ்கியிருக்க, ஆசிரியர் நிம்மதியாக உறங்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்காலத் தூண்களாக விளங்க வேண்டிய மாணவச் செல்வங்களுக்கு அறிவொளி புகட்ட வேண்டிய வகுப்பறையே, பொறுப்பற்ற தனத்தின் உச்சக்கட்டமாக மாறியிருப்பது அரசுப் பள்ளிகளின் தற்போதைய அவலநிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. ஆசிரியர் மற்றும் மாணவர்களின் இந்த அலட்சியப் போக்கு, கல்வி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

வெளியாகியுள்ள அந்த காணொளியில், வகுப்பறையின் நாற்காலியில் அமர்ந்தபடி ஆசிரியர் ஒருவர் எதைப் பற்றியும் கவலையின்றி அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில், அவரிடம் பாடம் கற்க வேண்டிய மாணவர்கள் தங்களின் கைகளில் ஸ்மார்ட்போன்களை வைத்துக்கொண்டு கேம்கள் விளையாடுவதிலும், பிற பயன்பாடுகளிலும் மூழ்கியிருக்கின்றனர்.

வகுப்பறையின் அமைதியையும், கல்வியின் புனிதத்தையும் முற்றிலும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் காட்சிகள், இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பையும் ஆதங்கத்தையும் கிளப்பியுள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களுக்குச் சீரான கல்வியை வழங்கவும் அரசுப் பல கோடி ரூபாய்களைச் செலவிட்டு வரும் சூழலில், இதுபோன்ற சம்பவங்கள் கல்வித் துறையின் கண்காணிப்புக் குறைபாட்டையே சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பொறுப்பற்ற ஆசிரியர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பள்ளி வகுப்பறைகளில் மொபைல் போன் பயன்பாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

“>