பிரபல தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் நிறுவனம், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் உடனான தனது வருடாந்திர அவுட்சோர்சிங் ஒப்பந்த மதிப்பில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதுவரை ஆப் டெவலப்மென்ட் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பணிகளுக்காக எச்சிஎல் நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 1,900 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைக் கருத்தில் கொண்டுள்ள கூகுள் நிறுவனம், பல வேலைகளை ஏஐ மூலமாகவே தாங்களே சுயமாய் முடித்துக் கொள்ளும் வகையிலான புதிய திட்டத்திற்கு மாறியுள்ளது. இதன் காரணமாக, எச்சிஎல் நிறுவனத்துடனான ஒப்பந்தத் தொகையை 1,900 கோடி ரூபாயில் இருந்து வெறும் 475 கோடி ரூபாயாக அதிரடியாகக் குறைத்துள்ளது.
இந்த அதிரடி மாற்றத்தால், கூகுள் நிறுவனத்தின் பணிகளில் ஈடுப்பட்டு வந்த சுமார் 1000 எச்சிஎல் டெக்னாலஜி ஊழியர்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஐடி துறையில் ஏற்படுத்தி வரும் இது போன்ற திடீர் மாற்றங்கள் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் டெக் உலகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
