மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து அழைத்து வரப்பட்ட 23 வயது இளம் பெண், நள்ளிரவில் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கயிற்றின் உதவியுடன் தப்பிக்க முயன்றபோது கயிறு அறுந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சந்தியா குமாரி  என்ற பெண்ணுக்கும், மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம்  பகுதியைச் சேர்ந்த 45 வயதான முகேஷ் குமார் லோஹார் என்பவருக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவர் முகேஷ் கூற்றுப்படி, இந்தத் திருமணம் முறையான சட்டப்பூர்வ ஒப்பந்தம்  பத்திரத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டு, சந்தியா  அழைத்து வரப்பட்டார். கணவனுக்கும் மனைவிக்குமிடையே 22 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 29 மற்றும் 30-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் விழித்துப் பார்த்த முகேஷ், சந்தியாவைக் காணாமல் தேடியுள்ளார். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள காலியிடத்தில் சந்தியா இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காவல்துறையினர், வீட்டின் மூன்றாவது மாடி கிரில் கம்பியில் ஒரு பாதி கயிறு கட்டப்பட்டிருந்ததையும், அறுந்த மீதிப் பகுதி உடலின் அருகே கிடந்ததையும் கண்டறிந்தனர். இதன்மூலம் அவர் வீட்டை விட்டுத் தப்பிக்க முயன்றபோது கயிறு அறுந்து கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டது. மாணக் சவுக் காவல் நிலைய ஆய்வாளர் விக்ரம் சிங் சவுகான்  இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பீகாரில் உள்ள பெண்ணின் வீட்டாருக்குத் தகவல் அளிக்கப்பட்டும் 48 மணி நேரமாக யாரும் வராததால், பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.