உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தசை வளர்ச்சியை அதிகரிக்கவும் புரதச்சத்து மிகவும் அவசியமானது என்பதில் சந்தேகமில்லை. இதற்காகப் பெரும்பாலானோர் தினமும் முட்டை, கோழிக்காறி, பன்னீர் அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பயறு வகையைத் தொடர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், தினமும் ஒரே வகையான புரத உணவை உட்கொள்வது உடலுக்கு முழுமையான நன்மைகளைத் தராது என்றும், புரத ஆதாரங்களை மாற்றி மாற்றி உட்கொள்வதே சரியானது என்றும் உடல்நலம் மற்றும் உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒவ்வொரு புரத உணவிலும் வெவ்வேறு வகையான அமினோ அமிலங்கள் , வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. உதாரணமாக, விலங்கு சார்ந்த புரதங்களில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களும், தாவர சார்ந்த புரதங்களில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களும் மாறுபட்டவை. தினமும் ஒரே உணவைச் சாப்பிடும் போது, குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்கள் மட்டுமே உடலுக்குக் கிடைக்கும். பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை உடலில் ஏற்படுவதற்கு இதுவே முக்கியக் காரணமாக அமைகிறது.
மேலும், தொடர்ந்து ஒரே மாதிரியான புரத உணவுகளை உட்கொள்வது குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மையைப் பாதிக்கும். பல்வேறு வகையான புரத உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் பெருக்கம் அடைந்து செரிமான மண்டலம் பலம்பெறும். அதுமட்டுமின்றி, ஒரே உணவைத் தொடர்ந்து சாப்பிடுவதால் சிலருக்கு செரிமானப் பிரச்சனைகள் மற்றும் குறிப்பிட்ட உணவுகள் மீதான ஒவ்வாமை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே, வாரத்தின் வெவ்வேறு நாட்களில் முட்டை, மீன், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, தாயிர், கொட்டைகள் மற்றும் விதைகள் எனப் பலதரப்பட்ட ஆரோக்கியமான புரத உணவுகளைச் சுழற்சி முறையில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான அமினோ அமிலங்களும் சீராகக் கிடைப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும் என்று ஆரோக்கிய நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
