இங்கிலாந்தின் ஸ்டாக்போர்ட் நகரைச் சேர்ந்த 71 வயதான லெஸ்லி கிரீன்ஹஃப் என்பவருக்குச் சொந்தமான  செல்லப் பூனை, தற்போது தனது 31 வது வயதை எட்டியுள்ளது. மனிதர்களின் கணக்குப்படி பார்த்தால் இதன் வயது சுமார் 146 ஆண்டுகளுக்குச் சமமாகும். உலகின் மிக வயதான வாழும் பூனை என்ற பெருமையைப் பெறத் தகுதியுள்ளதாகக் கருதப்படும் இது  தற்போது உலக அளவில் பெரும் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த வயதுக்கான அதிகாரப்பூர்வமான சான்றுகள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை.

இந்த பூனை கடந்த பத்து ஆண்டுகளாக சாதாரண குழாய்த் தண்ணீரைத் தொடுவதில்லை; மாறாக, பக்ஸ்டன் மினரல் வாட்டரை மட்டுமே குடித்து வருகிறது. மேலும், இதன் தினசரி உணவில் சால்மன் மீன், இறால், சிக்கன் மற்றும் டூனா போன்ற உயர்தர உணவுகள் இடம்பெறுகின்றன. கோடை காலத்தில் இதன் வசதிக்காக வீட்டில் எப்போதும் இரண்டு மின்விசிறிகள் சுழன்று கொண்டே இருக்கின்றன. குடிநீரில் ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கொடுப்பதுடன், உரிமையாளரின் பாசமும் அரவணைப்புமே மில்லியின் நீண்ட ஆயுளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன.

மில்லியின் உரிமையாளரான லெஸ்லியின் மனைவி பௌலா, கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்றால் காலமானார். மனைவியின் பிரிவால் மனமுடைந்த லெஸ்லி மட்டுமின்றி, மில்லியும் கூட சில நாட்கள் சாப்பிடாமல் மிகவும் சோர்ந்து போயிருந்தது. அப்போது அதற்குப் பிடித்தமான இறால் மற்றும் சிக்கன் போன்றவற்றை ஊட்டிவிட்டு அதனை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர். தற்போதைய முதுமைக் காலத்தில் மில்லி மிகவும் அமைதியான சுபாவத்துடன் காணப்படுவதாகவும், பகல் நேரங்களில் சோபாவின் பின்னேயும் வெயில் படும் இடங்களிலும் ஓய்வெடுப்பதாகவும் லெஸ்லி கூறுகிறார்.

பூனையின் நீண்ட ஆயுளுக்கு பாதுகாப்பான வீட்டுச் சூழல், தரமான உணவு, சுத்தமான தண்ணீர் மற்றும் தூய்மையான அன்புதான் காரணம் என லெஸ்லி உறுதியாக நம்புகிறார். இந்த பூனையின்  பெயரைக் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதே அவரது தற்போதைய மிகப்பெரிய கனவாகும். கையில் 1995 ஆம் ஆண்டின் பழைய புகைப்படம் மட்டுமே உள்ள போதிலும், தனது செல்லப் பிராணியின் இந்த அரிய சாதனையை ஒரு நாள் உலகம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.