தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து, தற்பொழுது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியின் மூலம் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய்யின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று பல்வேறு அரசியல் மற்றும் சென்சார் பிரச்சினைகளைக் கடந்து உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியானது. அவர் முதலமைச்சரான பிறகு வெளியாகும் கடைசித் திரைப்படம் என்பதால், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்று காலை முதலே தியேட்டர்களில் கொண்டாட்டங்கள் கட்டுக்கடங்காமல் கலைகட்டி வருகின்றன.
ரசிகர்களின் பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தற்பொழுது கோலிவுட்டின் முன்னணி திரை பிரபலங்கள் பலரும் இந்த திரைப்படத்தைக் காண அதிகாலை முதலே தியேட்டர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து படத்தின் வெற்றியைத் தியேட்டர்களில் கொண்டாட முன்னணி நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டி வருவது ஒட்டுமொத்தத் திரை உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | ஜனநாயகன் படம் பார்க்க வந்த நடிகை திரிஷா#Trisha #JanaNayagan #Vijay #News18TamilNadu pic.twitter.com/qEbP19gM5b
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 23, 2026
அந்த வகையில், தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் இளம் நாயகி மமிதா பைஜூ, முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் முன்னணி இசை அமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் இணைந்து படத்தைக் கண்டு ரசித்துள்ளனர். இவர்களின் வருகையால் திரையரங்கு வளாகங்கள் அனைத்தும் அலைமோதும் கூட்டத்தால் விழாக்கோலம் பூண்டுள்ளன.
இந்தக் கொண்டாட்டங்களின் உச்சகட்டமாக, விஜய்யின் பல வெற்றிப் படங்களில் ஜோடியாக நடித்த முன்னணி நடிகை திரிஷாவும் தற்பொழுது தியேட்டருக்கு வந்து படம் பார்த்து வருகிறார். முன்னதாக, திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்திருந்த நிலையில், தற்பொழுது நடிகை திரிஷாவும் சென்னை ரோகினி தியேட்டருக்கு நேரில் வந்து படம் பார்ப்பது ஒட்டுமொத்த சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
