பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் கோட் கல்சா பகுதியில் உள்ள தாகியா வாலி தெருவில், அதிகாலையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து விரைந்து வந்த காவல் நிலைய போலீசரும் உயர் அதிகாரிகளும் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். இறந்து கிடந்தவர் அதே கோட் கல்சா பகுதியைச் சேர்ந்த சுகிந்தர் சிங் என்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது, அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்தன. சுகிந்தர் சிங் தனது நண்பரான குல்தீப் சிங் என்பவருடன் இருந்தபோது, அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நண்பர் இறந்ததைக் கண்டு பயமும் பீதியும் அடைந்த குல்தீப் சிங், உடலை மறைப்பதற்காக வீட்டிலிருந்து ஒரு துணியைக் கொண்டு வந்து அதில் சடலத்தைச் சுற்றி, அதைத் தன் தோளில் சுமந்து சென்று தெருவில் வீசிவிட்டுத் தப்பியோடியது சிசிடிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளின் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், தப்பியோடிய குல்தீப் சிங்கை போலீசார் உடனடியாகக் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து அமிர்தசரஸ் துணை காவல் ஆணையர் ரவீந்தர் பால் சிங் தெரிவிக்கையில், “முதற்கட்ட விசாரணையில் வாலிபரின் இறப்புக்கு போதைப்பொருள் ஓவர்டோஸ் தான் காரணம் என்றும், பயத்தின் காரணமாகவே அவரது நண்பர் உடலைத் தெருவில் வீசிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது; இருப்பினும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் உறுதி செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.
