உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம், சாண்டி நகரத்தில் அமைந்துள்ள நகராட்சி குடிநீர் தொட்டியில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட விபத்தால் பெருமளவு தண்ணீர் வீணாகி, அப்பகுதியே வெள்ளக்காடாக மாறியது. இருப்பினும், அங்கு பணியில் இருந்த ஊழியர் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார்.

அதாவது அந்த பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக அங்கு பிரம்மாண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில், குழாயில் ஏற்பட்டிருந்த கசிவைச் சரிசெய்யும் பணியில் நகராட்சி ஊழியரான சம்சூல் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக குடிநீர் தொட்டியிலிருந்து அதிவேகத்தில் நீர் அழுத்தம் உருவானது.

 

 

View this post on Instagram

 

A post shared by Hind First (@hindfirst)

இந்த கடுமையான நீர் அழுத்தத்தைத் தாங்க முடியாமல், தொட்டியின் மெயின் வால்வு பிளேட் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், தொட்டியிலிருந்து ராட்சச நீரூற்று போல நீர் அதிவேகத்தில் வெளியேறி நாலாபுறமும் பீறிட்டடித்தது. இதில் கசிவைச் சரிசெய்துகொண்டிருந்த ஊழியர் சம்சூல், நீரினுடைய கடும் வேகத்தில் தூக்கி வீசப்படும் சூழல் ஏற்பட்டது. எனினும், அவர் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வால்வு வெடித்ததைத் தொடர்ந்து,  சாலைகளில் பெருமளவில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. இச்சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நகராட்சி அதிகாரிகள், விநியோகத்தை உடனடியாக நிறுத்தி, வால்வைச் சீரமைக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் நகருக்குச் சீரான குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.