மகாராஷ்டிர மாநிலத்தில் ஓடும் பயணியர் ரயிலில், பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொள்ள முயன்ற நபருக்கு சக பயணிகளின் உதவியோடு அந்தப் பெண் கொடுத்த அதிரடி பாடம் ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் அதிர வைத்துள்ளது. தப்பியோட முயன்ற காமுகனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவனுக்கு அடித்தடி கொடுக்காமல், முகத்தில் லிப்ஸ்டிக் பூசி, கைகளில் வளையல் மாட்டி நூதன முறையில் செய்த அவமானம் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புசாவலில் இருந்து வர்தா நோக்கிச் சென்ற மெமு (MEMU) பயணியர் ரயிலில் தான் இந்த அதிரடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் ஷேகான் மற்றும் பத்நேரா ஆகிய நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது, ஒரு நபர் அங்கு அமர்ந்திருந்த பெண் பயணியிடம் தொடர்ந்து வம்பு இழுத்து, அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். அந்தப் பெண் பலமுறை எச்சரித்தும், அந்த நபரின் அத்துமீறல் ஓயவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், துணிச்சலுடன் எழுந்து நின்று அவனைக் கூச்சல் போட்டு மடக்கியுள்ளார்.
பெண்ணின் துணிச்சலைக் கண்ட சக பயணிகள் உடனடியாக ஒன்று திரண்டு, அந்த நபர் ரயிலை விட்டு தப்பி ஓடாதவாறு நாலாபுறமும் வளைத்துப் பிடித்தனர். வழக்கமாக இதுபோன்ற சம்பவங்களில் தர்ம அடி கொடுக்கும் பொதுமக்கள், இந்த முறை சட்டத்தைக் கையில் எடுக்காமல் அவனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு நூதன அவமானத்தைத் தேடித் தர முடிவு செய்தனர்.
அதன்படி, அந்த நபரின் கைகளில் வலுக்கட்டாயமாக வளையல்களை மாட்டி, அவனது முகத்தில் லிப்ஸ்டிக் மற்றும் மேக்கப் பவுடர்களைப் பூசி, அனைவர் முன்னிலையிலும் கேவலப்படுத்தி அவனது அசிங்கமான செயலைக் கேள்வி எழுப்பினர். ரயிலுக்குள் நடந்த இந்த வினோதமான தண்டனையை அங்கிருந்த பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது செம வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பலரும், “அந்தப் பெண்ணின் துணிச்சலும், பயணிகளின் ஆதரவும் பாராட்டுக்குரியது; பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு இப்படித்தான் செய்ய வேண்டும்” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். அதேநேரம், “பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்காமல், அவனை ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் (RPF) ஒப்படைத்து சட்டப்படி தண்டித்திருக்க வேண்டும்” என்றும் சிலர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
