ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில், சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை, நர்சிங் மாணவி ஒருவர் தனது துரிதமான செயலால் காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹரியானா அரசுப் பேருந்து மோதியதில் அந்தப் பெண் மயங்கி விழுந்ததோடு, இதயத்துடிப்பு நின்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த இக்கட்டான சூழலில், அங்கே கல்வி பயின்று திரும்பிக்கொண்டிருந்த சோனாக்ஷி என்ற மாணவி, எதையும் யோசிக்காமல் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளிக்க முன்வந்தார்.

சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, சோனாக்ஷி அந்தப் பெண்ணின் நெஞ்சை அழுத்தி, சிபிஆர் சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். சுமார் இரண்டு நிமிடங்கள் விடாமுயற்சியுடன் அவர் அளித்த சிபிஆர் சிகிச்சையினால், அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பு மெல்லத் திரும்பியது.

ஆம்புலன்ஸ் வருவதற்குத் தாமதமானதால், தயங்காமல் சாலையோரம் சென்ற வாகனத்தை நிறுத்தி, அதில் அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். செல்லும் வழியிலும் அந்தப் பெண்ணின் உயிர் காக்கத் தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை அளித்து, மருத்துவமனையில் ஒப்படைக்கும் வரை சோனாக்ஷி பொறுப்புடன் செயல்பட்டார்.

https://x.com/i/status/2078428309969654059

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை, லட்சக்கணக்கானோர் பார்த்து அந்த மாணவியின் மனிதாபிமானத்தைப் பாராட்டி வருகின்றனர். “உயிரைக் காப்பாற்றும் கல்வியை முறையாகப் பயன்படுத்திய மாணவி,” என பலரும் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

விபத்து நடந்த சூழல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் வேளையில், இந்தச் சம்பவம், அவசர காலங்களில் சிபிஆர் போன்ற முதலுதவி பயிற்சிகள் எந்த அளவுக்கு அவசியம் என்பதை உலகிற்குப் புரிய வைத்துள்ளது.