பொதுவாகத் தனிமையில் இருக்கும் ஒருவரைப் பார்த்தால், அவர் ஏதோ சோகத்தில் இருக்கிறார் அல்லது அவருக்கு யாரும் இல்லை என்று சமூகம் நினைப்பதுண்டு. ஆனால், சுயசார்பும், தன் மீதான காதலும் கொண்டவர்களுக்குத் தனிமை என்பது ஒரு வரப்பிரசாதம். தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள மற்றவர்களின் துணையை எதிர்பாராமல், தனக்கான நேரத்தைத் தானே கொண்டாடும் ஒரு புதிய கலாச்சாரம் தற்போது இளைஞர்களிடையே பரவி வருகிறது. இதற்குச் சான்றாக, மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியாக காபி டேட் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நான்சி  என்ற அந்தப் பெண், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியே செல்லத் திட்டமிட்டிருந்தார். அன்றைய வானிலையும் அழகாக இருந்ததால், தனது நண்பர்களைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக நண்பர்கள் அனைவரும் தத்தமது வேலைகளில் பிஸியாக இருந்ததால் யாருக்கும் வர இயலவில்லை. இதனால் அப்செட் ஆகி, ஒட்டுமொத்த ஞாயிற்றுக்கிழமையையும் படுக்கையிலேயே கழித்து வீணடிக்க அவர் விரும்பவில்லை. உடனே ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Nancy (@voguewithnancy)

யாரும் வரவில்லை என்றால் என்ன? என்று தனக்குப்பிடித்த ஆடையை உடுத்தி, அழகாகத் தயாராகி தனியாகவே காபி டேட் புறப்பட்டார். ஒரு அழகான காபி ஷாப்பிற்குச் சென்று தனக்குப் பிடித்த காபியை ஆர்டர் செய்து, அதன் சுவையை ரசித்துக்கொண்டே நிதானமாகப் பருகினார். அதன் பின்னர், காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு தனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே மும்பை மாநகர வீதிகளில் ஜாலியாக உலா வந்தார். மற்றவர்களின் துணை இல்லாமலேயே அந்த நாள் முழுவதையும் தனக்கான நாளாக மாற்றி, ஒவ்வொரு நொடியையும் ரசித்துக் கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து நான்சி கூறுகையில், “எனக்கு குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுவது பிடிக்கும் தான். ஆனால், அவர்கள் இல்லாதபோது என்னால் தனியாக மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று அர்த்தமல்ல. மனிதன் தனக்குத்தானே தோழனாக வாழப் பழகிவிட்டால் வாழ்க்கை இன்னும் எளிமையாகவும் அழகாகவும் மாறிவிடும். என் சொந்தத் துணையுடன் நான் செலவிட்ட இந்த நேரத்திற்கு 10-க்கு 10 மதிப்பெண் தருவேன்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் உணர்த்தும் இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருவதோடு, தாங்களும் இதுபோன்று தனியாக வெளியே சென்று என்ஜாய் செய்வதாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.