உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், மாமனார் ஒருவரின் பாலியல் அத்துமீறலைத் தாங்க முடியாமல், அவரது மருமகளே ஆயுதத்தால் அவரைத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 67 வயதான மாமனார் படுகாயமடைந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதல் நடத்திய மருமகளை சம்பவ இடத்திலேயே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் சஃபிபூர் பட்டி பகுதியில் நிகழ்ந்துள்ளது. இங்கு வசித்து வரும் 23 வயதான சையதா என்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் ஷாசாத், ஹரியானாவில் வாடகைக்கு ரிக்ஷா ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். கணவர் பிழைப்புக்காக வெளியூரில் தங்கியிருந்ததால், சையதா தனது இரு குழந்தைகள் மற்றும் 67 வயதான மாமனார் ஜாகிர் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, மாமனார் ஜாகிர் தொடர்ந்து மருமகளிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
#Update pic.twitter.com/7x4hZvuw7U
— TRUE STORY (@TrueStoryUP) July 18, 2026
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் பலமுறை அழுது புலம்பியுள்ளார். தனது மாமனார் தன்னிடம் தினமும் தவறான முறையில் நடந்துகொள்வதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அப்பகுதி மக்கள் யாரும் அந்தப் பெண்ணின் குமுறலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், மாமனாரின் அத்துமீறல் எல்லையை மீறிய போது, வீட்டில் இருந்த கூர்மையான பிளேடு போன்ற ஆயுதத்தை எடுத்து அவரது பிறப்புறுப்பை அறுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல்துறை உயர் அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து இதுவரை எந்தவொரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமாகப் புகார் எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட முதியவருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பாகப் புகார் பெறப்பட்ட வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
