இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஈ-ரிக்ஷாக்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. பொதுவாக பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கே இந்த மின்சார ரிக்ஷாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சமூக வலைத்தளங்களிலோ இதன் பயன்பாடுகள் முற்றிலும் மாறுபட்ட கோணங்களில் வெளியாகி நம்மை வியக்க வைப்பது வழக்கம். சில நேரங்களில் அளவுக்கு அதிகமான மூட்டைகளை ஏற்றிச் செல்லும் இந்த வண்டிகள், சில நேரங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனமாகவும் மாறுகின்றன. அந்த வகையில், தற்போது யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒரு புதிய வடிவில் ஈ-ரிக்ஷா விவசாயக் களத்தில் இறங்கியுள்ள வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.
बात तो सही एक टीरी का उपयोग इतना हो गया है इस ने सब की नौकरी का ली है
असली AI तो यही है
देखना अगला अंतरिक्ष यान 🚀 टीरी ही होगा चांद पर जाने के लिए………… pic.twitter.com/8RZyoCwUOo
— Heena (@Heena895) July 17, 2026
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவின் தொடக்கத்தில் ஒரு விவசாய நிலம் காட்டப்படுகிறது. அடுத்த சில நொடிகளில், வழக்கமாக நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்தப்படும் டிராக்டருக்குப் பதிலாக, அங்கு ஒரு ஈ-ரிக்ஷா வண்டி வந்திறங்குகிறது. அந்த ரிக்ஷாவின் பின்புறத்தில் நிலத்தை உழுவதற்கான உழவுக் கலப்பை இணைக்கப்பட்டுள்ளது. ஈ-ரிக்ஷா முன்னோக்கி நகர நகர, அதன் பின்னால் இருக்கும் கருவி மண்ணை மிக லாவகமாகப் புரட்டி உழவு செய்கிறது. கடினமான மண்ணைப் புரட்ட அதிகத் திறன் கொண்ட டிராக்டர்கள் தேவைப்படும் நிலையில், சாதாரண ஈ-ரிக்ஷாவை வைத்து இந்த வேலையைச் சாதித்துக் காட்டியிருப்பது பார்ப்போரை உறைந்து போகச் செய்துள்ளது.
தங்களின் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப இந்தியர்கள் செய்யும் இத்தகைய உள்ளூர் தொழில்நுட்ப மாற்றங்கள் இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தங்களது பாராட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். “இந்தியர்களால் எந்த ஒரு கடினமான சூழ்நிலைக்கும் மிக எளிதாக ஒரு தீர்வைக் கண்டுபிடித்துவிட முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்” என்று பலரும் பாராட்டி வருகின்றனர். எக்ஸ் தளத்தில் @Heena895 என்ற கணக்கிலிருந்து இந்த வீடியோ பகிரப்பட்டு தற்போதைய ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.
