கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வால் பகுதியில், 23 வயது இளம்பெண் ஒருவர் பேருந்து நிலையத்தில் வைத்து மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை மாலை அரங்கேறிய இந்த பயங்கரவாதச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரைக் பதற வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்லப்பட்ட இளம்பெண் லாவண்யா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு தனியார் நர்சிங் ஹோமில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று மாலை, வழக்கம்போல தனது பணி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் லாவண்யா காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கொலையாளி, யாரும் எதிர்பாராத விதமாகத் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லாவண்யாவை சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளார்.

இதனால் நிலைகுலைந்த லாவண்யா, கொலையாளியிடமிருந்து தப்பிப்பதற்காகப் பேருந்து நிலையத்தில் நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடியுள்ளார். ஆனால், அந்த நபர் லாவண்யாவை விடாமல் துரத்திச் சென்று மிகக் கொடூரமான முறையில் வெட்டிச் சாய்த்துவிட்டு, அந்த இடத்தை விட்டுத் தப்பியோடிவிட்டார். பொதுமக்களும் பயணிகளும் நிறைந்த பேருந்து நிலையத்தில், கண் இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த கொடூரக் கொலையால் அந்தப் பகுதியே ஒட்டுமொத்தமாக உறைந்து போயுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்தக் கொலையைச் செய்தது லாவண்யாவின் தூரத்து உறவினரான சேத்தன் என்பது தெரியவந்துள்ளது. சேத்தன் கடந்த நீண்ட நாட்களாக லாவண்யாவை ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்ததாகவும், அதற்கு அந்தப் பெண் உடன்படாததால் தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்து நோட்டமிட்டு வந்து இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள், கொலையாளி சேத்தனைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வருவதோடு, கொலையின் பின்னணியில் உள்ள அனைத்துக் கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.