ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் நிலவி வந்த நீண்ட நேரக் காத்திருப்புக்கும், அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தனது புதிய இணையதளத்தின் பீட்டா பதிப்பை நேற்று இரவு 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய இணையதளம், முன்பதிவு செய்யும் முறையை முற்றிலும் எளிதாக்கி, பயணிகளுக்கு ஒரு புதிய டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இணையதளத்தின் மிக முக்கிய அம்சமாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த ‘கேப்சா’ குறியீடுகளை உள்ளிடும் முறை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் ‘கேப்சா’ எழுத்துக்களைப் பார்த்துப் பார்த்து டைப் செய்யும் தேவையற்ற நேர விரயம் தவிர்க்கப்பட்டு, மிகக் குறைந்த நொடிகளிலேயே தங்களது டிக்கெட்டுகளை அதிவேகமாக முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு செய்யும் வழிமுறைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த படிகளில் ‘ஃபாஸ்ட் செக்அவுட்’ செய்யும் வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிக் கணக்கு அல்லது யுபிஐ மூலம் பணம் செலுத்தி, நொடிப்பொழுதில் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இவற்றுடன், ரயில்களில் உள்ள அனைத்து வகுப்புகளின் இருக்கை நிலவரங்களையும் ஒரே திரையில், மிக எளிதாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வசதியும் இந்த புதிய பீட்டா பதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய தொழில்நுட்ப மாற்றங்கள், பண்டிகை காலங்களிலும் அவசர நேரங்களிலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதை முன்னெப்போதையும் விட சுலபமாகவும், வேகமாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
