ஆந்திர மாநிலத்தில் 6 தலைமுறைகளாக 83 உறுப்பினர்கள் ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா என்பவரது குடும்பத்தினரே இவ்வாறு ஒற்றைக் குடையின் கீழ் வாழ்ந்து அசத்தி வருகின்றனர். இவர்கள் தங்களது வசதிக்காக அடுத்தடுத்து உள்ள நான்கு வீடுகளில் வசித்து வந்த போதிலும், அனைவரும் ஒரே குடும்பமாகவே செயல்பட்டு வருகின்றனர். இந்த பிரமாண்ட குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும், சமையலும் ஒரே இடத்தில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குடும்பத்தைச் சேர்ந்த மருமகள்கள் அனைவரும் தங்களுக்குள் எவ்வித பாகுபாடுமின்றி, சமையல் பணிகளை மிகவும் ஒற்றுமையுடன் பகிர்ந்து செய்து வருகின்றனர். குடும்பத்தில் உள்ள நபர்களின் வயதிற்கு ஏற்ப வேலைகள் பிரிக்கப்பட்டு, பெரியவர்கள் குடும்பத்தை வழிநடத்த, இளைஞர்கள் தொழில் மற்றும் விவசாயத்தைக் கவனித்துக் கொள்கின்றனர். இக்குடும்பத்திற்குச் சொந்தமாக 120 ஏக்கர் விவசாய நிலமும், 4 பேருந்துகளும் உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானமும் தனித்தனியாக பிரிக்கப்படாமல், ஒரே பொதுக் கணக்கில்தான் சேர்க்கப்படுகிறது. இன்றைய தலைமுறைக்கு முன்மாதிரியாகத் திகழும் இவர்களது அசாத்திய ஒற்றுமை இணையவாசிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
