நாம் அன்றாடம் பருகும் பாலின் தரம் குறித்துப் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ ஒட்டுமொத்த பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பெரிய பாத்திரம் ஒன்றில் கொதிக்கும் பாலின் மேல், ஒருவர் கையில் வைத்திருக்கும் டிஷ்யூ பேப்பர்களை வரிசையாக அடுக்குவது போல் காட்டப்படுகிறது. பாலில் நனைந்தவுடன் அந்த பேப்பர்கள் அப்படியே அச்சு அசலாகப் பாலில் படியும் தடிமனான, வெண்மையான ஆடை போலவே மாறுகின்றன. இதைப் பார்த்து அதிர்ந்துபோன நெட்டிசன்கள், வாடிக்கையாளர்களை ஏமாற்றி இப்படித்தான் கலப்படப் பாலாடை தயாரிக்கப்படுகிறதா என்று தங்களின் கடும் கண்டனங்களையும், ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இத்தகைய செயல்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவின் பின்னணியில் மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. அதாவது, திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்பின் போது, நிஜமான பால் ஆடை போல் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சினிமா தந்திரமாக இது இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற முழு விவரம் இன்னும் தெரியாத நிலையில், கலப்படக் காரர்களின் அத்துமீறலா அல்லது சினிமா சூட்டிங் வித்தையா என்பது குறித்த விரிவான விசாரணைக்கு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.