இந்தியாவில் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது என்பது பொருளாதார ரீதியாக ஒரு பெரிய மைல்கல்லாகவும், கவுரவமாகவும் பார்க்கப்படும் நிலையில், “2026-ஆம் ஆண்டின் மிகவும் ஆபத்தான சம்பளம் 1 லட்சம் ரூபாய் தான்” என இன்ஸ்டாகிராம் பிரபலமும் உள்ளடக்க உருவாக்குநருமான நிதி குஷ்வாஹா கூறியுள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பளம் மிகவும் குறைவானது என்பதால் ஆபத்தானது அல்ல, மாறாக இது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் மற்றும் ஓரளவுக்கு ஆடம்பரமான வாழ்க்கையைத் தந்துவிடுவதால், அவர்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டப் பெரிய இலக்குகளை நோக்கி ஓடுவதைத் தடுத்து முடக்கிவிடுகிறது என்பதே அவரது வாதமாகும்.
View this post on Instagram
வாடகை செலுத்துவது, வார இறுதிகளில் உணவகங்களுக்குச் செல்வது, ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சுற்றுலா செல்வது போன்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தும் இந்தச் சம்பளத்தில் பூர்த்தியாகி விடுவதால், மனித மூளை “நம் வாழ்க்கை செட்டிலாகிவிட்டது” என்ற போலி நிம்மதிக்குள் சுருங்கிவிடுகிறது என்று நிதி குஷ்வாஹா விளக்கியுள்ளார். இந்த வசதியான சூழல் காரணமாக, திறமை இருந்தும் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் மக்கள் தேங்கிவிடுவதாகவும், “உங்களுக்கு எல்லாம் கிடைத்துவிட்டது என்று நினைக்கும் நாளில் உங்களது வளர்ச்சியும் உங்களுக்குத் தெரியாமலேயே நின்றுவிடுகிறது” என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், “வாழ்க்கை மற்றும் வளர்ச்சி என்பது வெறும் பணத்தை மட்டுமே துரத்துவது அல்ல” என்று எதிராகவும் நெட்டிசன்கள் தங்களது மாறுபட்ட கருத்துகளைப் பகிர்ந்து விவாதத்தை சூடாக்கி வருகின்றனர்.
