கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், 3,085 ஏக்கர் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி அறநிலையத்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, ரமேஷ் என்பவர் உண்மைகளை மறைத்து, இந்த நிலங்களை ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் என கற்பனையாகக் குறிப்பிட்டு, இவற்றை ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு தாரை வார்த்துவிட்டதாகத் தவறான பதிவை வெளியிட்டிருந்தார். இதன் உண்மைத்தன்மையை ஆராயாமல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதனை வழிமொழிந்து, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கை, தமிழ்நாட்டில் இனாம் நிலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 30 லட்சம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது தவறான அறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட இனாம் நில விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நில உரிமைக்கு அவர் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒருவேளை, அந்த நிலங்கள் அனைத்தும் உண்மையில் கோவில் நிலங்கள் தான் என்பதை நயினார் நாகேந்திரன் ஆதாரத்துடன் நிரூபித்தால், அவருக்கு ரூ.25 ஆயிரம் கோடி பரிசு வழங்கத் தயாராக இருப்பதாக அதிரடி சவால் விடுத்துள்ளார்.
