மத்தியப் பிரதேச மாநிலம் ரீவாவில், சினிமா த்ரில்லர் கதையையே மிஞ்சும் வகையிலான ஒரு அதிர்ச்சி மரணச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்னா பகுதியைச் சேர்ந்த விபின் குமார் யாதவ் என்பவருக்கு, தன் மனைவியின் முன்னாள் காதலனான சுனில் குஷ்வாஹா என்பவன் தன் உயிருக்கு உலை வைக்கப் போகிறான் என்பது கடைசி வரை தெரிந்திருக்கவில்லை. விபினின் மனைவியோடு இருந்த கள்ளத்தொடர்பைத் தொடர நினைத்த சுனில், அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட ஒரு நயவஞ்சகத் திட்டத்தைத் தீட்டினான். இதற்காக விபினுடன் பழகி, அவனது நம்பிக்கையைப் பெற்று நெருங்கிய நண்பனாக மாறினான். ஒருகட்டத்தில், விபினை அவனது மாமனார் ஊரான டீக்கர் கிராமத்திற்கு நைசாக அழைத்துச் சென்று, தனது கூட்டாளி ஒருவனுடன் சேர்ந்து விபினை அங்கிருந்த ஒரு கிணற்றில் தள்ளிவிட்டுக் கொடூரமாகக் கொலை செய்தான்.

கொலைக்குப் பிறகு யாருக்கும் சந்தேகம் வராதவாறு, விபினின் சடலத்தை மூன்று நாட்களாக அதே கிணற்றிலேயே போட்டு வைத்திருந்தனர். பின்னர் சாட்சியங்களை மறைப்பதற்காக, சடலத்தை வெளியே எடுத்து ரகசியமாக மண்ணில் புதைத்துவிட்டனர். விபின் காணாமல் போனது குறித்து அவரது தந்தை மார்ச் 26 அன்று போலீசில் புகார் அளித்திருந்தார். ஆரம்பத்தில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், விபினின் மனைவி மற்றும் கொலையாளி சுனிலின் மொபைல் போன் அழைப்புகளை  ஆய்வு செய்தபோது போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கிடையில் வேறு ஒரு வழக்கில் சுனில் கைதானபோது, போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்தக் கொலை ரகசியம் அம்பலமானது. அவன் காட்டிய இடத்தில் தோண்டியபோது விபினின் எலும்புக்கூடும் ஆடைகளும் மீட்கப்பட்டன. தற்போது முக்கிய குற்றவாளி சுனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொலையில் விபினின் மனைவிக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.