வாழ்க்கை சில நேரங்களில் ஒரு தாய்க்கு அசாத்தியமான கொடூரங்களை பரிசாக அளித்துவிடுகிறது. பெற்ற பிள்ளையின் சிரிப்புச் சத்தமும் அவனது பிஞ்சு விரல்களின் தீண்டலும் மட்டும்தான் ஒரு தாயின் ஒட்டுமொத்த உலகமாக இருக்க முடியும்.

ஆனால், உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ரதி சர்மா என்ற அந்தப் துரதிர்ஷ்டசாலித் தாய்க்கு, கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒட்டுமொத்த உலகமும் ஒரே நொடியில் இருண்டு போனது. அவரது ஒன்றரை வயதுக் குட்டி மகன் ஆரவ், ஒரு கொடூரமான மனித மிருகத்தால் தரையில் அடித்து படுகொலை செய்யப்பட்டான்.

வெள்ளிக்கிழமை அன்று பிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தப் பிஞ்சு குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற குற்றவாளி விராஜ் என்ற ஜிதேந்திர பாடக்கிற்கு நீதிமன்றம் ‘மரண தண்டனை’ விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பு வெளியான பிறகும் அந்தத் தாயின் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் நிறுத்தப்படவில்லை.

 ஒரு தாயின் தீராத தவிப்பு:

நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த ரதி சர்மா, தன் கைகளில் மகனின் புகைப்படத்தைப் பிடித்துக்கொண்டு விம்மி விம்மி அழுத காட்சி, அங்கிருந்த அனைவரையும் உருக வைத்தது. அவர் நடுங்கும் குரலில் சொன்ன வார்த்தைகள், அதிகாரப்பூர்வ சட்டங்களின் முகத்தில் அறையும் ஒரு நிதர்சனமான உண்மை:

“எனக்கு நீதிமன்றத்தின் மீதும் காவல்துறையின் மீதும் நம்பிக்கை இருந்தது, இன்று எனக்கு நீதி கிடைத்துவிட்டது. ஆனால்… இந்தத் தண்டனையால் என் ஒன்றரை வயது ஆரவ் மீண்டும் என் மடிக்குத் திரும்பி வந்துவிடுவானா? அவனது மழலைச் சத்தம் எனக்கு மீண்டும் கேட்குமா? என் உலகம் எப்போதும் போல மாறுமா? அந்தப் பாவிக்கு உடனடியாகத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். என் பிள்ளையை இழந்து நான் எப்படித் தவித்துக்கொண்டிருக்கிறேனோ, அதே போல அவனது தாயும் தன் மகனை இழந்து தவிக்க வேண்டும்!”

வெறும் 40 நாட்களில் 13 சாட்சிகளை விசாரித்து, விரைவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இந்த 40 நாட்களும் அந்தத் தாய்க்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக, ஒரு நரகமாகவே கழிந்திருக்கிறது.

மனித உணர்வுகளின் ஆகச்சிறந்த துயரத்தை நான் ரதி சர்மாவின் இந்த வெற்று மடியில்தான் காண்கிறேன். ஒரு கொடூரனுக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பது என்பது சட்டத்தின் கடமை, அது மற்ற குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை. ஆனால், அந்தத் தண்டனை ஒரு தாயின் இழப்பிற்கு ஈடாகுமா?

வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் சிதறிக் கிடக்கும் ஆரவின் விளையாட்டுப் பொம்மைகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்தத் தாய் அனுபவிக்கும் மரண வேதனைக்கு இந்த உலகத்தில் என்ன விலை இருக்கிறது? கடுமையான குற்றங்களுக்கு விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும் என்ற ரதி சர்மாவின் கோரிக்கை நியாயமானது. ஆனால், அந்த நீதி ஒரு தாயின் இதயத்தில் விழுந்த வடுக்களை ஒருபோதும் ஆற்றப் போவதில்லை.

சட்டப் புத்தகங்களில் இந்த வழக்கு ’40 நாட்களில் மரண தண்டனை’ என்ற ஒரு சாதனையாகப் பதியப்படலாம். ஆனால், பிரோசாபாத்தின் அந்த எளிய வீட்டில், தன் ஒன்றரை வயது மகனின் நினைவுகளோடு, எரியாத அடுப்போடு அமர்ந்திருக்கும் அந்தத் தாயின் வாழ்நாள் அனாதைத் தன்மைக்கு காலம் என்ன பதில் சொல்லப் போகிறது?

மரண தண்டனை என்ற தீர்ப்பு சற்றே ஆறுதல் அளித்தாலும், ரதி சர்மாவின் நாக்கில் இருந்து வெளிவந்த அந்த வார்த்தைகள்—”என் ஆரவ் இனி ஒருபோதும் வரமாட்டான்”—இந்தச் சமூகம் இருக்கும் வரை காற்றில் ஒரு மௌனமான அழுகுரலாக ஒலித்துக் கொண்டே இருக்கும்!