பீகார் மாநிலத்தின் பரவுனி – கதிஹார் ரயில் தடத்தில் உள்ள மான்சி ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலின் ஜன்னல் வழியாகப் பயணியின் செல்போனைப் பறிக்க முயன்ற திருடன் ஒருவனுக்குப் பயணிகள் கொடுத்த பாடம் தற்பொழுது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

மான்சி நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட போது, ஜன்னல் வழியாகப் பயணியின் மொபைலைத் திருடன் ஒருவன் திடீரெனப் பறிக்க முயன்றுள்ளான்.

இதனைப் பார்த்து உஷாரான சக பயணிகள், உடனடியாக அந்தத் திருடனின் கையைப் பிடித்து ஜன்னலுக்குள் இழுத்து இறுக்கமாகப் பூட்டிக் கொண்டனர். ரயிலின் வேகம் அதிகரித்த நிலையில், தனது கையை விடுவித்துக் கொள்ள முடியாமல் அந்தத் திருடன் மான்சி நிலையத்திலிருந்து ககாரியா ரயில் நிலையம் வரையிலான நீண்ட தூரத்திற்கு ஓடும் ரயிலின் வெளிப்பகுதியில் ஆபத்தான முறையில் காற்றில் தொங்கியபடியே பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.

இந்த மரண பயம் காட்டிய பயணத்தின் போது, ரயிலுக்குள் இருந்த பயணிகள் அவனுக்குத் தொடர்ந்து கன்னத்தில் அறைந்து தர்ம அடி கொடுத்துக் கொண்டே வந்துள்ளனர்.

வெளியில் இருந்த அவனது கூட்டாளிகள் அவனைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும், பயணிகள் அவனது கையை எவ்விதத்திலும் தளர்த்தாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டே இருந்தனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி, சட்டம் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.