இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரின் 2026-ம் ஆண்டு சீசனுக்காக, மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சஞ்சீவ் கோயங்காவிற்குச் சொந்தமான இந்த உரிமையாளர் குழு, மார்க்ரமை 200,000 பவுண்டுகள் ஒப்பந்தத்திற்குத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும், எஸ்.ஏ 20  தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் விளையாடி வரும் மார்க்ரம், தனது சிறந்த தலைமைப் பண்பால் பலமுறை கவனத்தை ஈர்த்துள்ளார்.

முன்னதாக, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை இரண்டு முறை சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற அனுபவம் அவருக்கு உள்ளது. டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்டிங் மற்றும் கேப்டன்சி திறமை கொண்ட மார்க்ரம், இதுவரை 238 போட்டிகளில் விளையாடி 136.17 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 5,989 ரன்களைக் குவித்துள்ளார்.

“>

 

இதில் 2 சதங்களும், 38 அரைசதங்களும் அடங்கும். அதுமட்டுமின்றி, பந்துவீச்சிலும் 48 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார். ஐபிஎல் தொடரில் 69 போட்டிகளில் 1,671 ரன்களையும், எஸ்.ஏ 20 தொடரில் 45 போட்டிகளில் 1,276 ரன்களையும் எடுத்துள்ள அவர், மான்செஸ்டர் அணியை வழிநடத்தத் தயாராகி வருகிறார்.

மார்க்ரமின் வருகை மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.