“என் மேல தப்பா பழி போட்டுட்டாங்கம்மா, அந்தப் 10 ரூபாயையும் 20 ரூபாயையும் நான் திருடவே இல்லை, எல்லாரும் என்னை அவமானப்படுத்துறதை என்னால தாங்க முடியல, என்னை மன்னிச்சுடுங்க!”
என்று பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் ஆனேக்கல் தாலுகா மாரசூரு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக எழுதிய உருக்கமான கடிதம் தற்பொழுது ஒட்டுமொத்த பெற்றோர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளியில் சக மாணவர்களின் 10 மற்றும் 20 ரூபாய் பணத்தைத் திருடியதாகத் ஆசிரியர்கள் தன் மீது வீண்பழி சுமத்தி, தொடர்ந்து கடுமையாகக் கடிந்து கொண்டு அவமானப்படுத்தியதால் ஏற்பட்ட மன வேதனையைத் தாங்க முடியாமல் அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனது மரணத்திற்கு யாரும் தனது தாயைக் குற்றம் சுமத்த வேண்டாம் என்று கடிதத்தில் சிறுமி வேதனையுடன் குறிப்பிட்டுள்ள நிலையில், தனது மகளுக்கு வீட்டில் எந்தத் தொந்தரவும் இருந்ததில்லை என்றும், பள்ளியில் ஆசிரியர்கள் கொடுத்த கொடூரமான மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் மாணவியின் தாயார் போலீசாரிடம் கதறி அழுது வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றி ஆய்வு செய்வதோடு, அந்தப் பள்ளி ஆசிரியர்களின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் தற்பொழுது தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர்.
