உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி இரயில் நிலையத்தில், நகர்ந்து கொண்டிருந்த இரயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த ஒரு பயணியை, அங்கிருந்த இரயில்வே பாதுகாப்பு படை காவலர் தனது சமயோசித புத்தியால் நொடிப் பொழுதில் காப்பாற்றியுள்ளார்.

மேலும் புதன்கிழமை நள்ளிரவு நேரத்தில், நிஜாமுதீன் – ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் இரயில் தனது வழக்கமான நிறுத்தத்திற்குப் பிறகு பிளாட்பாரத்தை விட்டு மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது. அப்போது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான ரமேஷ் ஜெயின் என்ற பயணி, ஓடும் இரயிலில் இருந்து அவசரமாக இறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாகத் தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே சரிந்துள்ளார்.

“>

இதனால் அவர் பிளாட்பாரத்திற்கும் தண்டவாளத்திற்கும் இடையே உள்ள ஆபத்தான இடைவெளியில் விழ இருந்த அந்த இக்கட்டான சூழ்நிலையில், அங்கு பணியில் இருந்த ஆர்.பி.எஃப் காவலர் பிரவீன் குமார் மின்னல் வேகத்தில் செயல்பட்டார். சற்றும் தாமதிக்காமல் அந்தப் பயணியை நோக்கி ஓடிச் சென்று, அவரைப் பிடித்து இழுத்து பத்திரமாக பிளாட்பாரத்திற்குள் கொண்டு வந்தார்.

இந்த அதிரடி மீட்பு நடவடிக்கை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய அந்தப் பயணியை மீட்ட இரயில்வே போலீசார், அவருக்குத் தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்து தேற்றினர். காவலர் பிரவீன் குமாரின் இந்த தீரமிக்கச் செயலை இரயில்வே அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.