தமிழ் சினிமா வரலாற்றில் எதார்த்தமான ஒளிப்பதிவின் மூலம் தனக்கென தனி முத்திரையைப் பதித்த பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான செழியன் காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘கல்லூரி’, ‘பரதேசி’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல அழுத்தமான திரைப்படங்களுக்குத் தனது அசாத்திய கேமரா கண்களால் உயிர் கொடுத்தவர் இவர். ஒளிப்பதிவாளராக மட்டுமன்றி, இவர் இயக்கிய ‘டூலெட்’ (To Let) திரைப்படம் மத்திய அரசின் மிக உயரிய தேசிய விருதைப் பெற்று, சர்வதேச அளவில் தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது திடீர் மறைவுத் செய்தி கேட்டு திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்து தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கலை உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படும் இவரது மறைவைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. எளிய மக்களின் வாழ்க்கையையும், வலியையும் தனது கேமராவில் நேர்த்தியாகக் கடத்திய ஒரு உன்னதமான கலைஞனின் மறைவு, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!
