தெலங்கானா மாநிலத்தில்  ரகுபதி என்பவர், தனது பல ஆண்டுகால சிறு சேமிப்பைக் கொண்டு கடன் எதையும் பெறாமல் புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக ரகுபதி, தன்னிடம் இருந்த 10 ரூபாய் நாணயங்களை மிகுந்த கவனத்துடன் சேமித்து வந்தார். அவர் வைத்திருந்த பழைய பைக் பழுதானதைத் தொடர்ந்து, தனது நீண்ட நாள் கனவை நனவாக்க, இந்தச் சிறு சேமிப்புப் பணத்தைக் கொண்டு புதிய பைக் வாங்க முடிவெடுத்தார்.

இதற்காக அவர் அந்த ஊரில் உள்ள வாகன விற்பனையகம் ஒன்றுக்கு, சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு சென்றார். முதலில் ஆச்சரியமடைந்த ஊழியர்கள், பிறகு அந்த நாணயங்களை எண்ணத் தொடங்கினர். ஏறக்குறைய இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, நாணயங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்த ஊழியர்கள், ரகுபதிக்கு புதிய பைக்கை வழங்கினர்.

கடன் அல்லது தவணை முறை எதையும் நாடாமல், தனது விடாமுயற்சியால் சேமித்த பணத்தில் பைக் வாங்கிய ரகுபதியின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.