அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்வதாக அறிவித்ததன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதலே கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ளதால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை அவசர அவசரமாக விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக, இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான நிஃப்டி (Nifty) ஒரே நாளில் 490 புள்ளிகள் வரை சரிந்ததுள்ளது. அதேபோல், சென்செக்ஸ் (Sensex) குறியீடு முந்தைய வர்த்தகத்தை விட 1,600 புள்ளிகள் வரை கிடுகிடுவென சரிந்து முதலீட்டாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த திடீர் வீழ்ச்சியால் ஜியோ ஃபைனான்சியல் (Jio Financial), ஸ்ரீராம் ஃபைனான்ஸ் (Shriram Finance), மாருதி சுசுகி (Maruti Suzuki) மற்றும் டாடா (Tata) குழுமத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன. உலகளாவிய இந்த அரசியல் பதற்றத்தால், இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களுக்குச் சுமார் ₹4.1 லட்சம் கோடி வரை ஒரே நாளில் அவுட்டாகி, பெரும் பண இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
