உலகளவில் சமீபகாலமாகவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாகப் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

இதனால் ஐடி துறையில் எப்போது வேலை பறிபோகுமோ என்ற அச்சமும், ஒருவித நிச்சயமற்ற சூழலும் ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலேயே, உலகப் புகழ்பெற்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், மீண்டும் ஒருமுறை தங்களது ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்து ஐடி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள தங்களது கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களில் கிட்டத்தட்ட 4,800 பேரை வேலையை விட்டு நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த உலகளாவிய பணியாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 2.1 சதவீதமாகும். இந்தத் திடீர் பணிநீக்க நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தாலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குச் சில சலுகைகளை வழங்க மைக்ரோசாப்ட் முன்வந்துள்ளது.

அதன்படி, வேலையை இழக்கும் ஊழியர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், உரிய இழப்பீட்டுத் தொகை மற்றும் அவர்கள் வேறு நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் போன்ற அனைத்தும் செய்து தரப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.