ஃபிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, அவர் ஆர்டர் செய்த பொருள்களில் ஒன்று விடுபட்டிருந்தது.

இது குறித்து அவர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், ஃபிளிப்கார்ட் நிறுவனம் அவருக்குப் பணத்தைத் திரும்ப வழங்காமலும், அவருடைய பிரச்சினைக்கு முறையான தீர்வு காணாமலும், அவரது புகாரை “தீர்க்கப்பட்டுவிட்டது” என்று தன்னிச்சையாகக் குறியிட்டு முடித்து வைத்துள்ளது.

இதனால் ஏமாற்றமடைந்த அந்தப் பெண் வாடிக்கையாளர், தனது ஆதங்கத்தையும் பிப்கார்ட்டின் இந்த மோசமான வாடிக்கையாளர் சேவையையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட, அது தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு எதிராகத் தங்களது கண்டனங்களையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். “என்ன மாதிரியான நடத்தை இது ஃபிளிப்கார்ட்? என்று கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள், செப்டோ போன்ற பிற ஆன்லைன் நிறுவனங்கள் இதுபோன்ற புகார்களுக்கு உடனுக்குடன் எந்தக் கேள்வியும் கேட்காமல் ரீஃபண்ட் வழங்குவதை இதனுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு நுகர்வோர் குறைதீர்ப்பு போர்ட்டலில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்குமாறும், இனிமேல் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க ஆன்லைன் ஷாப்பிங்கில் ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையை மட்டுமே பயன்படுத்துமாறும் இணையவாசிகள் பலரும் தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.