திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தின் போது, மணமகன் காட்டிய ஆதிக்கப் போக்கினாலும், மகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும், தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்தைத் துணிச்சலாக நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அருகே உள்ள சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, மணமக்களை காரில் ஏற்றி உறவினர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் பேண்ட் வாத்தியங்களுடன் உற்சாகமாக ஊர்வலம் நடத்தினர்.
அப்போது, உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மணப்பெண்ணும் மகிழ்ச்சியாக நடனமாட முன்வந்துள்ளார். ஆனால், இதில் சிறிதும் விருப்பமில்லாத மணமகன், எல்லோர் முன்னிலையிலும் ஆக்ரோஷமாகக் கோபப்பட்டு, மணப்பெண்ணை ஆடக்கூடாது எனத் தடுத்து நிறுத்தியுள்ளார். திருமணத்திற்கு முன்பே, பொதுவெளியில் அனைவரது முன்னிலையிலும் தனது மகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, கடும் ஆதிக்கப் போக்குடன் நடந்துகொண்ட மணமகனின் செயலைக் கண்டு மணப்பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
“திருமணத்திற்கு முன்பே இப்படியா? அப்படியானால் திருமணத்திற்குப் பிறகு மகளின் நிலை என்ன ஆகும்?” என்று கவலையடைந்த தந்தை, மகளின் எதிர்கால வாழ்வாதாரமும் சுதந்திரமும் முக்கியம் என்பதை உணர்ந்து, அந்தத் திருமணத்தை உடனே நிறுத்துவதாகத் துணிச்சலான அதிரடி முடிவை எடுத்தார். பெண்ணின் சுதந்திரத்தை மதிக்காத மணமகனின் இந்த செயலுக்குச் சாட்டையடி கொடுக்கும் விதமாகத் தந்தை எடுத்த இந்த முடிவு, தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வைரலாகி வருகிறது.
