சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்’ கடந்த ஜூன் 28-ஆம் தேதி வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதைப் பெறும் உலகின் முதல் நபர் பிரதமர் மோடி ஆவார்.

குறுகிய காலத்தில் இந்த விருது தயாரிக்கப்பட்டதால், அதில் டிஜிட்டல் முறையில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டதாக சீஷெல்ஸ் அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்திருந்தது. இருப்பினும், இது ஒரு போலியான அங்கீகாரம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கிண்டல் செய்து அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பைக் குலைக்கும் நோக்கில் பரப்பப்பட்ட இந்த அவதூறு கருத்துக்கு இந்திய அரசு தற்போது மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒரு மனநிலை சரியில்லாதவர் என்பது உலகறிந்த விஷயம். அப்படியொரு நபரிடம் பாதுகாப்புத் துறையை ஒப்படைத்திருப்பது பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய அவல நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.

அவருக்கு உருப்படியான வேலை எதுவும் இல்லாததால், தனக்குப் புரியாத சர்வதேச விவகாரங்களைப் பற்றி முட்டாள்தனமாகப் பேசி நேரத்தைக் கடத்தி வருகிறார். பொறாமை எப்போதுமே ஆபத்தானது, குறிப்பாக வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்களிடமிருந்து இத்தகைய கருத்துகள் வெளிப்படும் போது அது இன்னும் மோசமாகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.