எப்போதும் 18 வயது இளைஞனைப் போல இளமையாகவும், மரணமே இல்லாமலும் வாழ வேண்டும் என்ற விசித்திரமான ஆசையோடு வலம் வரும் அமெரிக்க பயோ-ஹேக்கர் மற்றும் தொழிலதிபரான பிரையன் ஜான்சனுக்கு (48 வயது) தற்போது குணப்படுத்த முடியாத ஒரு அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தனது உடலை இளமையாக வைத்திருக்கத் தனது சொந்த மகனின் ரத்தத்தை உடலுக்குள் செலுத்திக் கொண்டது மட்டுமின்றி, ஆண்டிற்குச் சுமார் 2 மில்லியன் டாலர் (சுமார் 16 கோடி ரூபாய்) வரை எக்கச்சக்கமாகச் செலவழித்து வந்த இவருக்கு, இயற்கை வேறு ஒரு வடிவில் செக் வைத்துள்ளது.

இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரையன் ஜான்சன், இரண்டு கெட்ட செய்திகளையும் ஒரு நல்ல செய்தியையும் பகிர்ந்துள்ளார். “எனக்கு ‘ஆட்டோஇம்யூன் கேஸ்ட்ரைடிஸ்’ (Autoimmune Gastritis – AIG) என்கிற குணப்படுத்த முடியாத அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நோயில் என் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியே எனது வயிற்றுப் பகுதியைத் தானாக அரித்துச் சாப்பிடுகிறது. உலக மக்கள் தொகையில் 2 முதல் 5 சதவீதம் பேருக்கு இந்த நோய் மறைமுகமாக இருக்கலாம்.

இதுதான் அந்த இரண்டு கெட்ட செய்திகள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இருப்பினும் நவீன மருத்துவ அறிவியலால் இதை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்றாலும், இதற்கான தீர்வை நான் தேடப் போகிறேன் என்பதுதான் அந்த ஒரு நல்ல செய்தி” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாத சோதனையில் கண்டறியப்பட்ட இந்த அரிய நோய் பாதிப்பால், உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் பல மடங்கு அதிகம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

சிறுவயதில் சாப்பிட்ட துரித உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் 25 வயதில் ஏற்பட்ட அதீத மன அழுத்தம், உடல் பருமன் போன்றவையே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என பிரையன் ஜான்சன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025-ம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்து, இங்கிருந்த காற்று மாசின் காரணமாக பாட்காஸ்ட் நிகழ்ச்சியைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு ஓடிய இவர், தற்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.