மத்தியப் பிரதேச மாநிலத்தில், நிஜத்தில் கட்டிடமே இல்லாத ஒரு அரசு பொது மருத்துவமனை, கடந்த ஆறு ஆண்டுகளாகத் தடையின்றி இயங்கி வருவதாக அரசு ஆவணங்கள் காட்டும் வினோத ஊழல் அம்பலமாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள பகுதியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட நவீன பொது மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என 6 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அரசு அறிவித்தது. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக இந்த மருத்துவமனைக்காக இதுவரை ஒரு செங்கல் கூட நடப்படவில்லை; ஏன், கட்டிடம் கட்டுவதற்கான நிலம் கூட இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கட்டிடமே இல்லாத இந்த மாய மருத்துவமனைக்கு, கடந்த ஆறு ஆண்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் என மொத்தம் 87 அரசு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அரசாங்கத்தால் ஆள்சேர்ப்பும் நடத்தப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இங்கிருந்த ஊழியர்களுக்குத் தொடர்ந்து பணியிட மாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வந்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, இந்த இல்லாத மருத்துவமனையின் பெயரில் சம்பளம் வாங்கும் 80 ஊழியர்கள், இந்தூரின் மற்ற அரசு ஆஸ்பத்திரிகளிலும், சஞ்சீவினி கிளினிக்களிலும் தற்காலிகமாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள மத்தியப் பிரதேச துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா, ஆரம்பத்தில் ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்ததை 100 படுக்கை கொண்ட மருத்துவமனையாக மாற்றத் திட்டமிட்டோம் என்றும், தகுந்த அரசு நிலம் கிடைக்காததால் தாமதம் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஊழியர்களின் சேவை வீணாகக் கூடாது என்பதால் அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நிலமே இல்லாமல் ஆவணங்களில் மட்டுமே ஓடிய இந்த முறைகேட்டை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளும்கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் திட்டமிட்டுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.