வெப் சீரிஸ் மோகத்தால் பள்ளி மாணவன் ஒருவன் செய்த காரியமும், அதன் தொடர்ச்சியாக அவன் ஆடிய கடத்தல் நாடகமும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு வசிக்கும் பள்ளி மாணவன் ஒருவன், ஒரு குறிப்பிட்ட வெப் சீரிஸில் வரும் கற்பனையான ‘சாது’ பாத்திரத்தால் ஈர்க்கப்பட்டுள்ளான். அந்த சாதுவை நிஜ வாழ்க்கையில் நேரில் சந்திக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில், யாருக்கும் சொல்லாமல் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு மெட்ரோ நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்து ரயில் மூலம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதாபுரம் பகுதிக்குச் சென்று நாள் முழுக்கத் தேடியுள்ளார்.
ஆனால், தேடிய நபர் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த மாணவன், மீண்டும் நாக்பூருக்குத் திரும்பியுள்ளார். காலையில் பள்ளிக்குச் சென்ற மகன் மாலை வரை வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே, இரவு நேரத்தில் வீடு திரும்பிய மாணவன், பெற்றோர் திட்டுவார்கள் என்ற பயத்தில் ஒரு த்ரில்லர் கதையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளான். பள்ளிக்குச் செல்லும்போது மூன்று பேர் தன்னை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று ஒரு தாபாவில் அடைத்து வைத்ததாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து வந்ததாகவும் நாடகமாடியுள்ளான்.
விஷயத்தைக் கேட்டு அதிர்ந்த போலீசார், மாணவனின் கதையை மட்டும் நம்பாமல் அந்தப் பகுதியின் சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் மெட்ரோ நிலையப் பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அதில், மாணவன் யாருடைய துணையும் இன்றி தனியாகவே மத்தியப் பிரதேசம் சென்று வந்தது அம்பலமானது. இதையடுத்து போலீசார் அவனிடம் அன்பாக விசாரித்தபோது, வெப் சீரிஸ் தாக்கத்தால் சாதுவைத் தேடிச் சென்றதையும், மாட்டுவோம் என்ற பயத்தில் கடத்தல் நாடகம் ஆடியதையும் ஒப்புக்கொண்டான்.
