வெற்றிகரமான மனிதர்களின் பின்னணியில் இருக்கும் பெற்றோர்களின் தியாகம் எப்போதுமே அளவிட முடியாதது என்பதை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் ஒரு நெகிழ்ச்சியான செய்தி வைரலாகி வருகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரியும் மனு அகர்வால் என்பவர், தனது கல்விக்காகப் பெற்றோர் செய்த தியாகத்தை லிங்க்ட்இன்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது பி.சி.ஏ படிப்பைச் சேர்ந்தபோது, ஒரு செமஸ்டருக்கான கட்டணமான 15,000 ரூபாயைக் கூட செலுத்த முடியாத ஏழ்மை நிலையில் அவரது குடும்பம் இருந்துள்ளது.
அந்தச் சூழ்நிலையில், அவரது தந்தை வேறு வழியின்றி தாயின் தங்க நகைகளை விற்க முடிவெடுத்தபோது, அவரது தாய் ஒரு வார்த்தை கூட பேசாமல் தனது தங்க வளையல்களைக் கழற்றிக் கொடுத்துள்ளார். அந்த இரவில் தனக்குத் தூக்கமே வரவில்லை என்று மனு அகர்வால் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், கடினமாக உழைத்த மனு அகர்வால் தற்போது அமெரிக்காவின் சீட்டில் நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் கிளையில் ஆண்டுக்கு சுமார் 1.9 கோடி ரூபாய் சம்பளத்தில் உயர் பதவியில் உள்ளார்.
தனது தாயின் தியாகத்திற்குப் பிரதிபலனாக, “உனக்கு வேண்டிய நகைகளை எல்லாம் இப்போது வாங்கிக் கொள் அம்மா” என்று அவர் போனில் கூறியுள்ளார்.
அதற்கு அவரது தாயோ, “மகனே, நீ இந்த நிலைக்கு உயர்ந்ததே எனக்கு எல்லாமே திரும்பக் கிடைத்தது போலத்தான்” என்று பாசத்துடன் பதிலளித்துள்ளார்.
“சில கடன்களைப் பணத்தால் அடைக்க முடியாது” என்று அவர் முடித்துள்ள இந்த நெகிழ்ச்சியான பதிவு, தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தங்களின் ஆசைகளைத் தியாகம் செய்யும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் உன்னதமான அன்பை உணர்த்துவதாக பலரையும் நெகிழ வைத்துள்ளது.
