பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ள தற்போதைய சூழலில், தனக்கு நேர்ந்த அநாகரிகச் செயலுக்கு நடுரோட்டிலேயே கார் ஓட்டுநரை விரட்டிப் பிடித்து பெண் ஒருவர் தட்டிக் கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் மற்றொருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு காரின் ஓட்டுநர், அந்தப் பெண்ணைப் பார்த்து அநாகரிகமான முறையில் கண்ணடித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த அந்தப் பெண், சற்றும் யோசிக்காமல் அந்த காரை நடுரோட்டிலேயே துரத்திச் சென்று மறித்துள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
காரை மறித்த அந்தப் பெண், காரின் அருகே சென்று ஓட்டுநரை உடனே வெளியே வருமாறு ஆக்ரோஷமாக சத்தமிட்டுள்ளார். அவர் காரை விட்டு வெளியே வந்ததும், “என்னைப் பார்த்து எப்படி நீ கண்ணடிக்கலாம்?” என்று கேட்டு அவரை நோக்கிப் பாய்ந்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.
Noida: A man winked at a girl from a moving car, the girl stopped the vehicle right in the middle of the road and gave that guy a solid Reply🫡
pic.twitter.com/U2YNbqzSbm— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 5, 2026
அந்த நபர் தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று கூறி தப்பிக்க முயன்ற போதிலும், அந்தப் பெண் அவரை விடவில்லை. ஒருகட்டத்தில் நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்த கார் ஓட்டுநர், நடுரோட்டிலேயே பெண்ணின் முன்னால் கைகூப்பி மன்னிப்புக் கேட்டு கெஞ்சத் தொடங்கினார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், அநாகரிகமாக நடந்துகொண்ட நபருக்குச் சரியான பாடம் புகட்டியதாகப் பெண்ணின் தைரியத்தைப் பாராட்டி வரும் வேளையில், பரபரப்பான சாலையில் காரை நிறுத்தி மோதலில் ஈடுபட்டது தவறு என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
