சென்னை புழல் மத்திய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை, சிறைக்குள்ளேயே வைத்து கொலை செய்ய ரூ.1 கோடி வரை பேரம் பேசப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி சிறைத்துறையை உலுக்கியுள்ளது. அதாவது வெள்ளைக்காளி மற்றும் ரவுடி லாலி மணிகண்டன் ஆகிய இருவரும் கொலை வழக்குகளில் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே கடுமையான முன்பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பழைய பகையைத் தீர்த்துக் கொள்வதற்காக, சிறைக்குள்ளேயே வெள்ளைக்காளியைத் தீர்த்துக்கட்ட லாலி மணிகண்டன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரகசியமாகச் சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
இதுகுறித்த ரகசியத் தகவல் போலீசாருக்குக் கிடைக்கவே, உஷாரான சிறை அதிகாரிகள் லாலி மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரிடமும் தனித்தனியாக அதிரடி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், வெள்ளைக்காளியைக் கொலை செய்ய ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதும், அதற்காக முன்பணமாக ரூ.25 லட்சம் கைமாறத் திட்டமிடப்பட்டிருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறையில் உயர் அதிகாரிகள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால், அந்தச் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமையே கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் அம்பலமானது.
இந்த பயங்கர சதித்திட்டம் உறுதியானதைத் தொடர்ந்து, சிறைக்குள் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதன்படி, ரவுடி லாலி மணிகண்டன் உடனடியாக சேலம் மத்திய சிறைக்கும், அவனது கூட்டாளிகளான தென்மாவட்ட ரவுடிகள் 3 பேர் கடலூர் மத்திய சிறைக்கும் அவசர அவசரமாக மாற்றப்பட்டனர். புழல் சிறைக்குள்ளேயே ரவுடியைக் கொலை செய்ய அரங்கேறிய இந்த பயங்கர சதித்திட்டம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
