நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே, மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியரை குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.  அதாவது  கார்த்தி (39) என்பவர்  திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கார்த்தி, கடந்த 2-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ம வாய்க்காலில் கார்த்தி மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கார்த்தியின் மரணம் விபத்தல்ல, அது திட்டமிட்ட கொலை என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. சொந்த ஊருக்கு வந்திருந்த கார்த்தி தனது நண்பரான விக்னேஸ்வரன் (31) என்பவரை வரவழைத்துள்ளார். இருவரும் அப்பகுதியில் உள்ள குளக்கரை ஓரம் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், அங்கிருந்த குளத்தில் இறங்கி இருவரும் குளித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், கார்த்தியின் தலையைத் தண்ணீருக்குள் வலுக்கட்டாயமாக அமுக்கி, மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் போலீஸாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, கார்த்தியின் உடலை அருகில் உள்ள  வாய்க்காலில் வீசிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த விக்னேஸ்வரனை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நண்பனை நண்பனே தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.