சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம்) உடனான கூட்டணி குறித்து மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தபோது, அம்பேத்கரின் நூலை வெளியிட்ட மேடையில், நான் எங்கு இருந்தாலும் எனது உள்ளம் அங்கேயே இருக்கும் என்று அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலுக்கு முன்பாக எத்தனையோ ஆசை வார்த்தைகள் மற்றும் வாய்ப்புகள் என்னை நோக்கி வந்தபோதும், ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பலவீனமடைவதற்கு நான் ஒருபோதும் இடம் தர மாட்டேன்’ என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். தவெகவுக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பாகவே, அதுகுறித்த தகவலை நான் திமுக தலைமைக்குத் தெளிவாகத் தெரிவித்துவிட்டேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என்று திமுக தலைமை தான் அறிவித்ததே தவிர, நான் ஒருபோதும் கூறவில்லை. விசிக இதுவரை திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தவெக அமைச்சரவையில் விசிகவுக்கு இடம் ஒதுக்கப்பட்ட சமயத்தில், திமுக தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, விசிகவுடன் தங்களுக்கு இனி எந்த உறவும் இல்லை என்று அறிவித்தார்கள்.

திமுகவுடனான நட்பை நான் ஒருபோதும் சிதைக்கவில்லை, என் நட்பு எவ்வளவு தூய்மையானது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல், தவெக கூட்டணியில் இணைகிறோமா என்ற கேள்விக்கு நான் இன்னும் பதில் அளிக்கவில்லை. தவெக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விசிகவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது உண்மைதான். புதிய கூட்டணிகள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டுள்ளோம், ஆனால் அங்கு இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதில் நாங்கள் நிச்சயம் இடம்பெறுவோம் என்றார்.