கர்நாடகாவின் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி நகரில், பிரிந்து வாழ்ந்து வந்த தனது மனைவி ஷாமா மற்றும் அவரது தங்கை ரேஷ்மா ஆகிய இருவரையும் ஏஜாஸ் என்ற 30 வயது நபர் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

மேலும் கோலார் பகுதியைச் சேர்ந்த ஏஜாஸ், மது மற்றும் சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் கணவரின் சித்திரவதை காரணமாக ஷாமா கடந்த நான்கு மாதங்களாகத் தன் மூன்று குழந்தைகளுடன் சிந்தாமணியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தனது மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு ஏஜாஸ் பலமுறை அழைத்தும், அவர் வர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரக் கொலையை அவர் அரங்கேற்றியுள்ளார். திங்கட்கிழமை அதிகாலை சுமார் 6:15 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நடந்தபோது, ஷாமாவின் மூன்று சிறு குழந்தைகளும் அதே வீட்டிலேயே இருந்துள்ளனர்.

இந்நிலையில் கொலை செய்த பிறகு, அந்தக் குழந்தைகளைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கோலாரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஏஜாஸ், பின்னர் காலை 8:30 மணியளவில் உள்ளூர் காவல் நிலையத்தில் அவராகவே சென்று சரணடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து சிந்தாமணி நகர காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.