நொய்டாவைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர் அமேசான் தளத்தில் புக் செய்த கேஸ் ஸ்டவ்வை சரியான நேரத்தில் டெலிவரி செய்யாமல், பின்னர் பணத்தை மட்டும் திருப்பித் தந்த விவகாரத்தில் அமேசான் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ₹6,000 கூடுதல் அபராதம் விதித்துள்ளது.
மேலும் நொய்டாவைச் சேர்ந்த அபிஷேக் பரத்வாஜ் மற்றும் அக்சய் ஆகியோர் கடந்த 2025 மார்ச் மாதத்தில் ₹3,069 மதிப்புள்ள மில்டன் கேஸ் ஸ்டவ்வை ஒரே நாளில் டெலிவரி செய்யப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் அமேசானில் ஆர்டர் செய்துள்ளனர்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அது டெலிவரி செய்யப்படவில்லை. வாடிக்கையாளர் தொடர்ந்து அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்தையும் டெலிவரி ஏஜென்ட்டையும் தொடர்பு கொண்டும், “வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்ற தவறான காரணத்தைக் கூறி அமேசான் ஆர்டரை ரத்து செய்துவிட்டு, பணத்தை மட்டும் ரீஃபண்ட் செய்துள்ளது.
இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட நுகர்வோர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஆணையம், “பொருட்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்யாமல், பின்னர் பணத்தை மட்டும் திருப்பித் தருவது வாடிக்கையாளருக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கும், சேவை குறைபாட்டிற்கும் தீர்வாகாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.
மேலும், தாங்கள் ஒரு இடைத்தரகர் மட்டுமே என்று கூறி அமேசான் தப்பிக்க முயன்ற வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. இதன் அடிப்படையில், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ₹5,000 மற்றும் வழக்குச் செலவுக்காக ₹1,000 என மொத்தம் ₹6,000 தொகையை நுகர்வோருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அமேசான் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
