அமெரிக்காவில் அதிக சம்பளம் மற்றும் சிறந்த தொழில் வளர்ச்சி கிடைக்கும் என்றாலும், அங்கு சென்றால் வீட்டு வேலைகளைத் தானே செய்ய வேண்டும் என்ற வித்தியாசமான காரணத்திற்காக இந்திய ஊழியர் ஒருவர் அமெரிக்க வேலை வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
மேலும் ‘ஜிம்ராட்’ நிறுவனத்தின் இணை நிறுவனரான உஜ்ஜவல் அஸ்தானா என்பவர் தனது எக்ஸ் தளத்தில் இந்த சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அவரது உறவினர் ஒருவர், பணிபுரியும் நிறுவனத்திலேயே அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றும் அதை மறுத்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் வழங்கப்படும் சம்பளத்திற்கு, அங்கு சொந்தமாக வீடு துடைப்பது, சமைப்பது போன்ற வீட்டு வேலைகளைத் தான் மட்டுமே செய்ய முடியும் என்றும், இந்தியாவில் கிடைப்பது போல் 10 நிமிடங்களில் மளிகைப் பொருட்கள் டெலிவரி அல்லது வீட்டிற்கே வந்து மசாஜ் செய்யும் வசதிகள் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் இந்தியாவில் தனியாக இருந்தாலும் ஒரு ‘ராஜா’ போல சொகுசாக வாழ முடிவதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கு ஆதரவாகப் பேசிய சிலர், “இந்தியா போன்ற ஒரு சொகுசான வாழ்க்கை உலகத்தில் வேறு எங்குமே கிடைக்காது. இங்கு பால், காய்கறி, சமையல்காரர், வீட்டு வேலை செய்பவர்கள் என அனைத்தும் மிக எளிதாகக் கிடைப்பதால் இந்தியாதான் சொர்க்கம்” என்று ஊழியரின் முடிவை நியாயப்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் “வெளிநாட்டிற்குச் செல்வது வெறும் பணத்திற்காக மட்டுமல்ல, அது புதிய கலாச்சாரத்தையும் வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுக்கொடுக்கும்; சில வருடங்களாவது அங்கு சென்று அனுபவம் பெற்றிருக்கலாம், இல்லையெனில் பின்னாளில் வருத்தப்பட நேரிடும்” என்று தங்களின் மாற்று கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
