டெல்லியைச் சேர்ந்த சமூக ஊடக உள்ளடக்க உருவாக்குநரான மஹேக் தமேஜா என்பவர், தனது பயணத்தின் போது சந்தித்த சமேலி ஹால்தார் என்ற பெண் உபெர் ஓட்டுநரின் ஊக்கமளிக்கும் கதையை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து கடந்த 7 ஆண்டுகளில் 6,000-க்கும் மேற்பட்ட சவாரிகளை வெற்றிகரமாக முடித்து, 4.8 ஸ்டார் ரேட்டிங்குடன் இந்தத் துறையில் சமேலி சாதித்து வருகிறார். ஆரம்பத்தில் இத்தொழிலுக்கு அவரது கணவரும் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“>

ஆனால், சமேலி தனது விடாமுயற்சியால் அனைத்தையும் மாற்றி, தன் குடும்பத்திலேயே முதன்முதலில் ஓட்டுநர் உரிமம் பெற்று கார் ஓட்டக் கற்றுக்கொண்ட பெருமையைப் பெற்றுள்ளார். தற்போது அவரது குடும்பத்தினர் அவரைப் பெருமையுடன் பாராட்டி வருகின்றனர்.

மேலும் பெண்கள் நடமாடப் பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் டெல்லி-என்சிஆர் பகுதியில் ஒரு பெண் ஓட்டுநராகப் பணிபுரிவது சமேலிக்கு எளிதாக இருக்கவில்லை. பயணிகளிடமிருந்தும் அந்நியர்களிடமிருந்தும் வரும் தரக்குறைவான விமர்சனங்களையும், பாதுகாப்பு சார்ந்த சவால்களையும் அவர் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறார்.

இதனால் தனது பாதுகாப்பு கருதி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அவர் கார் ஓட்டுகிறார். மஹேக் தமேஜா இந்தத் துணிச்சலான பெண்ணைப் பாராட்டி, “தீதி, நீங்கள் ஒரு உத்வேகம்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “காலாவதியான சிந்தனைகளை உடைத்து சாதிக்கும் பெண்களுக்கு எங்களின் வாழ்த்துகள்” எனப் பலரும் சமேலியின் மனவலிமையைப் பாராட்டி வருகின்றனர்.