குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டத்தில் வெளிநாட்டு மதுபான பாட்டில்களில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அடைத்து விநியோகித்த கொடூர சம்பவத்தில், பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​பவ்நகர் மாவட்டத்தில் வெளிநாட்டு மதுபான பிராண்டுகளின் லேபிள்கள் ஒட்டப்பட்ட பாட்டில்களில் கள்ளச்சாராயம் அடைத்து விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய 67க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சோதனையில் அந்த சாராயத்தில் ஆபத்தான ‘மெத்தனால்’ ரசாயனம் கலந்திருந்தது தெரியவந்தது.

​கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

​இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, குற்றத்தில் தொடர்புடைய 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் முதற்கட்டமாக 13 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் வெளிநாட்டு மது பாட்டில்களில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு 13 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.