இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் வேலைக்கும் செல்லாமல், உயர்கல்வியும் கற்காமல், எந்தவிதத் தொழிற்பயிற்சியும் பெறாமல் முடங்கியிருப்பதாக நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
’Reimagining Skilling for Viksit Bharat@2047′ என்ற தலைப்பில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையானது, 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 78-வது தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS) தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், ‘NEET’ (Not in Education, Employment, or Training) என வகைப்படுத்தப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகளவில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முறையான கல்வி பயின்ற பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவீதத்தினர் மட்டுமே தங்களின் தகுதிக்கு ஏற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், போதிய தொழில்சார் திறன் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் இல்லாததே இந்தத் தேக்கநிலைக்கு முக்கிய காரணம் என்றும் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இளம் தலைமுறையினரில் 8.7 கோடி பேர் வேலை மற்றும் தொழிற்பயிற்சியின்றி இருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதனைச் சரிசெய்யப் பள்ளி அளவிலேயே தொழிற்கல்விகளையும், மானியத்துடன்கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையும், இந்த அதிர்ச்சித் தகவலும் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
