இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதான தொழிலதிபர் தாமஸ் டேவிட் பவுல் என்பவரும், அதே நாட்டைச் சேர்ந்த 21 வயதான இசபெல் வைலட் கரிரஸ் என்ற பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்திற்கு வந்து, அங்கு சொகுசு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
மது மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையான இவ்விருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தனர். இதற்காக கடந்த புதன்கிழமை ஒரு நகைக்கடைக்கு திருமண மோதிரம் வாங்குவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது மோதிரம் வாங்குவதில் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோபத்துடன் வீட்டிற்குத் திரும்பிய இருவரும் தீவிர போதை தரக்கூடிய உயர்ரக போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட போதை மயக்கத்திலும், ஆத்திரத்திலும் காதலி இசபெல், தனது காதலன் தாமஸ் டேவிட்டை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, காதலி இசபெல்லைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
